இந்தியாவில் அதிக பணம் உழைக்கும் விளையாட்டான ஐ,பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டு தோறும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது.

13 வது ஐ.பி.எல் போட்டியை கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரை நடத்த திட்ட மிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

20 ஓவர் உலகக் கிண்ணத்திற்கு முன்பு ஐ.பி.எல் போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி ரத்து செய்யப்பட்டால் அந்த காலகட்டத்தில் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலையே நிலவுகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.3,700 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் ஒளிபரப்பு உரிமை ரூ.3269 கோடியாகும். ஸ்பான் சர்ஷிப் மற்றும் விளம்பர வருவாய் போன்றவை அடங்கும். டைட்டில் ஸ்பான்சர் மூலம் ரூ 400 கோடியை இழக்கும். மேலும் வீரர்களின் முககவச விளம்பரம் செய்ய ரூ.1 கோடி, உடை முன் பக்கம் விளம்பரம் செய்ய ரூ.5 கோடி, தோள்பட்டையில் விளம்பரம் செய்ய ரூ.2.5 கோடியும் வருவாயாக கிடைக்கும். இவற்றையும் கிரிக்கெட் வாரியம் இழக்கும்.

போட்டிகள் நடைபெறும் மாநில சங்கங்களுக்கு பார்வையாளர் கட்டணம் கிடைக்காது என்பதால் ரூ.250 கோடி வரை வருவாயை இழக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.